தீவிரவாதத்தை பழிவாங்க முடியுமா?
நான் உணர்ச்சியற்றுப் போன நேரம் அது. 40 இளைஞர்களை கோழைத்தனமாக கொன்று குவித்த ஒரு தீவிரவாத வெறிச்செயல் அன்று நிகழ்ந்திருந்தது. அதின் புகைப்படங்களை பார்க்கும் போது, அது அண்டை நாட்டிலிருந்து ஊடுருவி, மும்பையில் பெரும் நாசத்தை உண்டாக்கிய மற்றுமொரு சம்பவத்தை நினைவூட்டியது. இதயம் வலியால் துடிக்க ஆரம்பித்தது.
ஒவ்வொருமுறையும் இப்படி இந்தியா தனது வீரர்களை இழக்கும் போது, ஊடகங்களில் ஒரு பரபரப்பு ஆரம்பித்துவிடும். "பழிவாங்க வேண்டும்" என்று அதின் குரல் ஒலிக்கும். இந்தமுறையும் அதே போல, "புல்வாமாவிற்காக பழிதீர்ப்போம்" என்று ஊடகங்கள் அனைத்தும் பேச ஆரம்பித்தன. கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியனும் தன்னில் கிளர்ச்சி கொண்ட தருணம் அது. பழிவாங்க வேண்டும் என்ற நிலை ஓங்கி நின்றது.
சரி, எப்படி பழிவாங்குவது? தீவிரவாதத்தை எப்படித்தான் வேரறுப்பது?
அழிப்பதற்காக ஆயத்தப்படும் எந்த ஒரு தீவிரவாதியும், தனது அழிவைக் குறித்து ஒருபோதும் கவலைப்படுவதில்லை . நடந்த இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதியும், ஏற்கனவே அந்த அழிவோடு அழிந்து விட்டான். ஆகவே இனி நாம் அவனை பழிவாங்க முடியாது. அப்படியானால், நாம் யாரைத்தான் பழிவாங்க முடியும்? இந்த அழிவிற்கு திட்டம் தீட்டிய மற்றும் உதவிய எல்லோரையும் தானே? ஆனால், நாம் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? அவர்களின் முகவரிதான் நமக்குத் தெரியாதே!
அவர்கள் நம் அண்டை நாட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இன்னொரு இரகசிய அதிரடி தாக்குதலையோ, அல்லது ஒரு யுத்தத்தையோ இதற்காக நாம் அரங்கேற்ற வேண்டும். அதுவும் எப்படி நடக்கும்? நேற்று வரை ஒன்றாக இருந்து, ஒரு நொடியில் உருவம் கூட தெரியாமல் சிதறிப் போனவர்களின் தோழர்களைக் கொண்டு தானே அது நடக்கும்? இரத்திற்காக ஏங்கும் நிலத்தில் கால்களைப் பதித்து, போர் முழக்க சத்தத்தை மட்டும் செவியில் தாங்கி, சரியான தூக்கமில்லாமல், எப்போதும் எதிராளியின் துப்பாக்கி முனையில் நிற்பது போன்ற உணர்வுடன் இருக்கும் நிகழ்வு அது. நம்முடைய வீரர்களில் ஒருவர் கூட இதினிமித்தம் மடிந்து போக மாட்டார்கள் என்பதற்கு யார் உறுதியளிக்க முடியும்? அங்கே பாதுகாப்பு தான் உண்டோ? அல்லது இந்த கொடூரமான வெறிச்செயலுக்கு காரணமானவர்களைத் தவிர அப்பாவிகளான வேறு யாரையும், நமது வீரர்களும் தெரியாமல் கூட கொன்றுவிடமாட்டார்கள் என்று தான் கூறிவிட முடியுமா?
இதையெல்லாம் தாண்டி, இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்களை மட்டும் எப்படியாவது தேடி கண்டுபிடித்து பழிவாங்குவதாகவே வைத்துக்கொள்வோம். அடுத்து என்ன? இன்னொரு தீவிரவாத கும்பல் எழும்பும். இன்னொரு பழிவாங்கும் வேட்டையும் தொடரும்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நாம் மறந்து போகாமல் இருக்க வேண்டிய இன்னொரு செய்தியும் உண்டு. நாமும், நமது அண்டை நாடுகளும் அணு ஆயுத தேசங்கள் என்பதே அது. ஒரே ஒரு தவறான முடிவு போதும். அணு ஆயுத யுத்தமும், லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் மரணமும் உறுதி.
ஆக, நாம் என்ன தான் செய்வது? இதை அப்படியே விட்டுவிடலாமா?
இல்லை! கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது விளங்கும்; இந்த தீவிரவாத சம்பவத்தை அரங்கேற்றிய இளைஞன், இந்தியாவிலுள்ள காஷ்மீரில் தங்கி வாழ்ந்து, அங்கேயே பணி புரிந்து கொண்டிருந்தவன். ஒரு சமுதாயமாக, ஏதோ ஒரு நிலைப்பாட்டை "நாம்" தெரிந்தெடுத்ததால், இன்று அவன் மிகப்பெரிய அழிவிற்கு காரணமாகிவிட்டானோ? இப்படி அதின் ஆழத்திற்கு சென்று தீர்வு காணாவிட்டால், இதே போல இன்னொரு வாலிபன் உருவாக மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்? பெரும் அழிவை தேர்ந்தெடுக்கும் இன்னொரு இளைஞனை நம்மால் தாங்கமுடியுமோ?
அது மட்டுமல்ல! இங்கே உளவுத்துறையின் மிகப்பெரிய ஒரு தோல்வியும் நடந்துள்ளது. கொஞ்சம் ஆழமாக யோசித்தால் இதுவும் விளங்கும். நமக்கு தெரியாமலேயே, 350கி வெடிமருந்தை நம் நாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்பது நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்? எந்த அதிகாரியும் துணைபோகாமல், அப்படி ஒன்று நடக்க சாத்தியமே இல்லை. ஆக, சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடியுங்கள்! தகுந்த தண்டனையை நிறைவேற்றுங்கள்! நமக்குள்ளேயே தீவிரவாதத்தை உருவாக்கும் எந்த ஒரு சக்தியையும், ஒருபோதும் இந்தியா தாங்கிக்கொள்ளக் கூடாது.
இந்தியாவில், குறிப்பாக அதின் எல்லையில் இருக்கும் அனைத்து துளைகளும் மூடப்பட வேண்டும். இது மிக மிக கடினமானது என்பது உண்மைதான். ஆனால், நமக்கு இதைவிட வேறு தெரிந்தெடுப்புகள் தான் உண்டோ??
தீவிரவாதத்தை அழிக்க ஒரே வழி, இந்தியாவிற்குள் தீவிரவாதத்திற்கு துணைபோகும் நிலையை இல்லையென்றாக்கி, வெளியிலிருந்து தீவிரவாதத்தை ஒருபோதும் நமது இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதும், நமது வீரர்களை தீவிரவாதிகளுக்குள் நுழைந்து அழியாமல் காப்பதுமே !!!
Comments
Post a Comment